மாதாந்தம் 50-60 வைத்தியர்கள் வெளிநாடு செல்ல விடுப்பு கோருகின்றனர்..
மாதமொன்றுக்கு 50-60 வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதியைப் பெறுவதற்காக சுகாதார அமைச்சுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் விடுமுறையை முறையாகவும் விரைவாகவும் அங்கீகரிப்பதில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் செயற்பட்டால் வைத்தியர்கள் முறையான நடைமுறைக்கு அமைய வெளிநாடு செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள நியாயமற்ற வரிக் கொள்கை, வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேண இயலாமை போன்ற காரணங்களால் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாக வைத்தியர் சமில் தெரிவித்தார்.
மொனராகலை வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் உயிரிழந்தவரின் உறவினர்கள் சட்ட வைத்திய பணிகளுக்காக சடலத்துடன் அம்பாறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மஹாஓயாவில் விசேட வைத்தியர் ஒருவர் இல்லாத காரணத்தினால் மேலும் ஆதார வைத்தியசாலையில், நோயாளிகள் அதே சேவையைப் பெறுவதற்கு தெஹியத்தகண்டி, பொலன்னறுவை அல்லது அம்பாறை வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது என்றார் அவர்.
திஸ்ஸமஹாராமய, நுவரெலியா, பாணந்துறை ஆகிய வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்கள் இல்லாதமை பாரதூரமான நிலைமைகளை உருவாக்குவதாகவும் வைத்தியர் சமில் தெரிவித்தார்.