’20’ஐ ஆதரிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றது சுதந்திரக் கட்சி! – மைத்திரி

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிக்கும் கட்டாயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாம் ஆதரிக்கத் தீர்மானித்துள்ளமைக்குப் பிரதான காரணம் கடந்த நல்லாட்சியில் முன்னாள் பிரதமர் ரணில் தலைமையிலான குழுவினரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே ஆகும்.
பல அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் எனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியில் இருந்த எனக்கான அதிகாரங்களைக் குறைத்தேன். நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்களை வழங்கினேன். ஆனால், அதை ரணில் குழுவினர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நாட்டின் அரசியலை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தனர். நாடாளுமன்றத்துக்கான அதிகாரங்களை அவர்கள் துஷ்பிரயோகப்படுத்தினர். நல்லாட்சியை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்ல அவர்கள் இடமளிக்கவில்லை.
இந்தநிலையில், 19ஆவது திருத்தச் சட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தி 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது.
நல்லாட்சியில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களினால் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்” – என்றார்.