எனக்கு அரை மணி அவகாசம் கொடுங்கள், ஏழைகளுக்கான பட்ஜெட்டை தயாரித்து காட்டுவேன் – மம்தா பானர்ஜி
2023-24ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருந்தது. இந்நிலையில், பட்ஜெட் அறிவிப்புகளை பாஜக அதன் கூட்டணி கட்சிகள் வரவேற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்கள் முன்வைத்து வருகின்றனர்.
மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பிர்பம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மம்தா கூறியதாவது, “2023-24 பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதை தலைசிறந்த பட்ஜெட் என்று அவர்கள் கூறுகின்றனர். இதில் பட்ஜெட்டில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது.
நாட்டில் 3.7 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் வேலையின்மை மற்றும் புதிய வேலைவாய்ப்பு குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. இது ஒரு கறுப்பு பட்ஜெட். இது முற்றிலும் சந்தர்ப்பவாத பட்ஜெட் ஆகும். எதிர்காலம் குறித்த சிந்தனை பட்ஜெட்டில் ஏதும் இல்லை. நம்பிக்கைக்கான ஒளி ஏதும் இல்லை. எனக்கு அரை மணி அவகாசம் கொடுங்கள். ஏழை மக்களுக்கான பட்ஜெட்டை எப்படி தயாரிக்க வேண்டும் என நான் காட்டுவேன். வரும் காலத்தில் நாட்டின் ஏழைகள் தான் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள்” என்று சாடினார்.