மக்களைப் படுபாதாளத்தில் தள்ள யானை – மொட்டு கூட்டுச் சதி! – முறியடிக்க வேண்டும் என்கிறார் சஜித்.
“2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தோற்கடிக்க யானை – மொட்டு கூட்டுச் சதி நடந்தது போல், தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களைப் படுபாதாளத்தில் போட யானை – மொட்டு கூட்டுச் சதி ஒன்று இடம்பெற்று வருகின்றது. இந்தச் சதியை முறியடிக்கும் பொறுப்பு மக்களுடையது.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றியுடன் இந்நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி மாற்றியமைக்கும்.
தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒப்பந்தம் செய்வதையும், மக்கள் வளத்தைப் பயன்படுத்தி பிரதிநிதிகள் வளமடைவதையும் தடை செய்வோம்.
ராஜபக்சக்கள் உருவாக்கிய மோசடி மற்றும் ஊழல் கலாசாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி முற்றாக இல்லாதொழிக்கும்.
இன்று இனவாதம், இன பேதம், மதவாதம், மத பேதம் என்பன தோற்றுப்போயுள்ளது. இனவாதத்தையும், மதவாத்தையும் விதைத்து நாட்டை அழித்த ராஜபக்சக்களின் மொட்டின் கதையும் முடிந்துவிட்டது. ஆனால், தற்போது யானையும் மொட்டும் ஒன்று சேர்ந்து மக்களின் மீது வரியை சுமத்தி மக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
ஒரு நாட்டின் அரசு முதுகெழும்புடன் சரியான நிலைப்பாட்டிலிருந்து சர்வதேச அமைப்புக்களைக் கையாள்வதுடன் நாட்டு நலனுக்கான தீர்மானங்களை எடுக்க வேண்டுமே தவிர, மக்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது.
ஐக்கிய மக்கள் சக்தி அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்தாலும், அந்த ஒப்பந்தம் மக்களின் வாழ்வை அழிக்காது, மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் விதமாகவே மேற்கொள்ளும்” – என்றார்.