சொன்னதைச் செயலில் காட்டுவதுதான் ‘மொட்டு’ – புதிய அரசமைப்பும் வரும் என்கிறார் மஹிந்தர்
“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒக்டோபர் மாதத்துக்குள் நிறைவேற்றியே தீருவோம். அதன்பின்னர் புதிய அரசமைப்பின் சட்ட வரைவையும் தயாரிப்போம். அதையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவோம்.”
– இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு சொன்னதையே செயலில் காட்டும். ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போதும், பொதுத்தேர்தல் காலத்தின்போதும் நாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியே தீருவோம். எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று நாம் போலி வாக்குறுதிகள் எதனையும் வழங்கவில்லை.
நல்லாட்சி அரசால் நிறைவேற்றப்பட்டிருந்த அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நாட்டுக்குச் சாபக்கேடாக இருந்தது. அதனால்தான் அதைத் திருத்தியமைத்து 20ஆவது திருத்தச் சட்ட வரைவைத் தயாரித்துள்ளோம். இது நிறைவேறிய பின்னர் புதிய அரசமைப்புக்கான சட்ட வரைவையும் தயாரிக்கவுள்ளோம்.
நாடும் அரசும் மக்களும் ஓரணியில் இயங்க வேண்டுமென்றால் ஒழுங்கான – நேரான அரசமைப்பு இருக்க வேண்டும்” – என்றார்.