முன்னாள் சபாநாயகர் கருவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது.

முன்னாள் சபாநாயகரும் நன்மதிப்புக்குரிய அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கரு ஜயசூரிய தேசத்துக்கு ஆற்றிய, சிறந்த சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரியவுக்குப் பதக்கம் அணிவித்து விருது வழங்கிக் கௌரவித்தார்.
இந்த நிகழ்வின் போது ‘கரு ஜயசூரியவின் பெருமைமிக்க வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகள்’ எனும் நினைவுப் புத்தகத்தை ஜனாதிபதியிடம் கரு ஜயசூரிய வழங்கி வைத்தார்.
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் ‘ஸ்ரீ லங்காபிமானி’ எனும் கெளரவ விருதானது இலங்கைப் பிரஜை மற்றும் இலங்கையர் அல்லாத ஒருவருக்கு இலங்கை அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய விருதாகும்.
இந்த விருதை ஒரே நேரத்தில் ஐந்து இலங்கையர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும், அதாவது விருதைப் பெற்ற ஐந்து பேர் உயிருடன் இருந்தால், ஆறாவது நபருக்கு விருதை வழங்க முடியாது. எனினும், விருது பெறுபவரில் ஒருவர் மரணித்திருந்தால் மேலுமொரு நபருக்கு அவ்விருதை வழங்க முடியும்.
2017ஆம் ஆண்டு இலங்கை சங்கீத கலைக்காக டபிள்யூ.டி. அமரதேவாவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாஸ, டி.பி. விஜேதுங்க மற்றும் ஆதர் சி. கிளார்க், லக்ஸ் மன் கதிர்காமர், ஏ.ரி. ஆரியரத்ன, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், கிறிஸ்டோபர் வீரமந்திரி ஆகியோரும் ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர் .
“நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் இனவாதப் போராட்டமன்றி, தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கும் பணியையே மேற்கொள்ள வேண்டும்” – என்று இவ்விழாவில் உரையாற்றிய கரு ஜயசூரிய தெரிவித்தார்.
75 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைச் சரி செய்து பெருமைமிக்க நாட்டை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க ஒன்றிணையுமாறு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் அனைவரிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.
தனது அரசியல் வாழ்வில் எக்காலத்திலும் தான் யாரையும் விமர்சிக்கவில்லை என சுட்டிக்காட்டிய அவர், சட்டத்துக்குப் புறம்பாக எவ்விதமான செயல்களையும் தான் செய்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் முயற்சியின் பலனாக, ஓமல்பே சோபித தேரர் முன்வைத்த நீதி மற்றும் நியாயத்துக்காகத் தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும், இந்த ‘ஸ்ரீ லங்காபிமானி’ தேசிய விருது தான் பின்பற்றிய கொள்கைகளுக்கு வழங்கிய கௌரவமாகும் என்றும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்ட அழைப்பின் பேரிலேயே தான் அரசியலுக்கு வந்ததை நினைவுகூர்ந்த கரு ஜயசூரிய, அதன் மூலம் பொதுமக்களுடன் இணைந்து செயற்படக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
நகரபிதா என்ற வகையில் கொழும்பு நகர சபையில் புதிய கலாசாரத்தை உருவாக்க முடிந்ததாகவும், அதன் வெற்றி சர்வதேச ரீதியில் கூட அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அமைச்சர்கள், ஆளும் கட்சி – எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கரு ஜயசூரியவின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். – என்றுள்ளது.