ரஷிய வீரர்களை ஒலிம்பிக்கில் அனுமதிக்கக் கூடாது.
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடக்கிறது. பிரான்சில் 100 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்நாட்டு அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
இதற்கிடையே, பாரீஸ் ஒலிம்பிக்கில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கையில் எடுத்துள்ளது. ரஷிய, பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக்கில் பொதுவான கொடியின் கீழ் பங்கேற்பார்கள். பாஸ்போர்ட் அடிப்படையில் எந்த நாட்டு வீரருக்கும் தடை விதிக்க முடியாது என கடந்த வாரம் ஐ.ஓ.சி. அறிவித்தது.
இது நிகழ்ந்தால் பாரீஸ் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என உக்ரைன் எச்சரித்தது. ரஷியாவை ஒலிம்பிக்கில் அனுமதிப்பதற்கு மேலும் பல நாடுகள் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளன.
இந்நிலையில், போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா, பெலாரஸ் நாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும்போது மற்ற நாட்டு வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.
இரு நாட்டு வீரர்களையும் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். அத்துடன் உக்ரைன் மீதான போரை திசைதிருப்பும் விதமாக இந்த விளையாட்டு பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளன. இதுதொடர்பாக போலந்து விளையாட்டுத்துறை மந்திரி கமில் போட்னிக்சுக் கூறுகையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்பட 40 நாடுகள் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும்.
நாம் ஒன்றிணைந்து புறக்கணிக்கும்போது பாரீஸ் ஒலிம்பிக்கின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என தெரிவித்துள்ளார்.