விமர்சனம் நான் கடவுள் இல்லை.
சி.ஐ.டி. அதிகாரியாக இருக்கும் நாயகன் சமுத்திரகனி, மனைவி இனியா, மகள், தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவர் போலீசாக இருக்கும் போது பல கொலை செய்துவந்த சரவணனை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சரவணன், தன்னை கைது செய்த சமுத்திரகனியையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்.
இறுதியில் சரவணன், சமுத்திரகனியை பழிவாங்கினாரா? சமுத்திரகனி, சரவணனை மீண்டும் பிடித்து ஜெயிலில் அடைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் சி.ஐ.டி அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சமுத்திரகனி. மனைவி, மகளை காப்பாற்ற முயற்சிப்பது, சரவணனை பிடிக்க ஆர்வம் காட்டுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் இனியா, குடும்ப பெண்ணாக மனதில் பதிகிறார். சமுத்திரகனிக்கு உதவியாளராக வரும் சாக்ஷி அகர்வால் கவர்ச்சியிலும், ஆக்ஷனிலும் கலக்கி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து பாராட்டை பெற்றிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சரவணன், தன்னை கொடூரமானவனாக நிரூபிக்க போராடி இருக்கிறார். ஒரு சில இடங்களில் தன்னுடைய கதாபாத்திரத்தை ரசித்து செய்திருக்கிறார். தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் இப்படத்தை இயக்கியும் இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். சமுத்திரகனியின் தாயாக வருபவர் மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
ஒன் லைன் கதையை வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். உதவி தேவைப்படும் போது உதவுபவர்களே உண்மையான கடவுள் என்பதை சொல்லியிருக்கிறார். நல்ல போலீஸ்காரர்களுக்கு ஏற்ற படமாக உருவாக்கியதற்கு பெரிய பாராட்டுக்கள். விஜய்யின் போஸ்டர்கள், விஜய் பேசிய வசனங்கள் படத்தில் ஆங்காங்கே வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். மகேஷ் கே தேவ்-வின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘நான் கடவுள் இல்லை’விறுவிறுப்பு.