ஜோஷிமத் போல மேலும் நிலத்திற்குள் மூழ்கும் ஒரு நகரம்..?
கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் 6 கட்டடங்கள் விரிசலுடன் காணப்பட்டன. அப்போது தொடங்கி, 20 வீடுகளில் அடுத்தடுத்து விரிசல்கள் தென்பட்டன. உடனடியாக சுதாரித்த மாவட்ட நிர்வாகத்தினர் அங்கு வீடுகளில் வசித்து வந்தோரை வெளியேற்றினர்.
இந்நிலையில் ஜம்முவில் உள்ள தோதா மாவட்டத்தின் நர்வால் வார்ட் பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் உள்ள 3 மாடி வீடு ஒன்று முழுமையாக உடைந்து விழுந்துள்ளது. நய்பஸ்தி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் தொடர்ச்சியாகவே வீடுகள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தோதாவில் விரிசல் விழும் வீடுகள் கண்காணிக்கப்பட்டு அதில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் வலுவிழந்து விரிசல் விழுந்ததால், அந்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் ஜம்மு காஷ்மீரின் தோதா பகுதியிலும் குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் தோதா மாவட்டமும் மண்ணில் புதைகிறதா என்று அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.