இலங்கையில் ‘இருள் சூழ்ந்த சுதந்திரம்’ தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டு. நகரில் பெரும் போராட்டம்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ‘இருள் சூழ்ந்த சுதந்திரம் எனப் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று மாபெரும் உணர்வெழுச்சிப் போராட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அஹிம்சைப் போராட்டத்தின் அடையாளமாக குல்லா தொப்பி அணியப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு – கல்லடி பாலத்தின் ஊடாக ஊர்வலம் இடம்பெற்றதுடன் பாலத்தின் இரு மருங்கிலும் சங்கிலி வடிவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர்வலம் கல்லடிப் பாலத்தின் அருகில் உள்ள மைதானம் வரையில் சென்றது.
இதன்போது இறுதி யுத்ததின்போது வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைகள் குறித்து வீதி நாடகம் நடத்தப்பட்டதுடன் அரசியல் கைதிகள் நிலைமைகள், தமிழர்களின் நிலைமைகள் குறித்த ஊர்திப் பவனியும் இடம்பெற்றது.
ஊர்வலத்தைத் தொடர்ந்து கல்லடி பாலம் இறக்கத்தில் உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது இருள் சூழ்ந்த சுதந்திர தின உரைகளும் இடம்பெற்றன.