ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பிராத்வெய்ட், தேஜ்நரின் சதம்.
வெஸ்ட் இண்டீஸ்- ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க நாளில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 112 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கிரேக் பிராத்வெய்ட், தேஜ்நரின் சந்தர்பால் தலா 55 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் காலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
தேனீர் இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய இருவரும் சதம் அடித்தனர். ஒரே இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் அடிப்பது 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதில் தேஜ் நரினுக்கு இது முதலாவது சதமாகும். இவர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஷிவ்நரின் சந்தர்பாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெய்ட் 116 ரன்களுடனும் (246 பந்து, 7 பவுண்டரி), தேஜ்நரின் 101 ரன்களுடனும் (291 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.