2 கி.மீ ரயில் தண்டவாளம் திருடு போனதால் அதிர்ச்சி… பீகாரில் அடுத்த பகீர் சம்பவம்!
பீகாரில் சில மாதங்களுக்கு முன்பு ரயில் இன்ஜின் திருடப்பட்ட நிலையில், அங்கு தற்போது ரயில்வே தண்டவாளங்களும் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ரயிலில்தான் திருட்டு சம்பவங்கள் நடக்கும். ஆனால், கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் கர்காரா என்ற பகுதியில் பழுதுபார்பதற்காக நின்ற ரயிலின் இன்ஜினை ஒரு கும்பல் திருடி பல பாகங்களாக பிரித்து காயலான் கடையில் விற்றனர்.
இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே, கடந்த வாரம் மற்றோரு பகீர் சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள சமஸ்டிபூர் ரயில்வே கோட்டத்தில் பந்தவூல் என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து லோஹாத் என்ற சர்க்கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்ளது. இந்த சர்க்கரை ஆலை சில ஆண்டுகளாக இயங்கவில்லை. எனவே, இந்த ரயில் பாதையில் போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், சுமார் இரண்டு கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை ஒரு மர்ம கும்பல் திருடி விற்றுள்ளது. இந்த விஷயமானது கடந்த ஜனவரி 24ஆம் தேதிதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஷயத்தை கேள்விபட்ட அதிர்ச்சி அடைந்த ரயில்வே நிரவாகம் இரு ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து துறைசார்ந்த விசாரணைக்கு உத்தரவு விடுத்துள்ளது.
இந்த திருட்டு சம்பவத்தில் ரயில்வே ஊழியர்களும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் ஜனவரி 19ஆம் தேதி, பீகார் தலைநகர் பாட்னாவில் செல்போன் டவரை திருடிச் சென்ற பரபரப்பு சம்பவம் நடந்து குறிப்பிடத்தக்கது.