இரட்டை சதம் விளாசிய சந்தர்பால் மகன் – வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 447 ரன்கள் குவித்து டிக்ளேர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதனால் முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 112 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-ம் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பிராத்வேட் – தேஜ்நரின் சந்தர்பால் ஆகியோர் சதம் அடித்தனர்.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கேப்டன் பிராத்வேட் 182 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் நங்கூரம் போல் நின்ற தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதம் அடித்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 447 ரன்கள் எடுத்தது.
ஜிம்பாப்வே தரப்பில் பிராண்டன் மவுடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.