துருக்கியை உலுக்கும் நிலநடுக்கம்: 3-வது முறையாக ஏற்பட்டதால் அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் துருக்கியில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடந்த 1939-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் அதிகம் என கூறப்படுகிறது.
மத்திய துருக்கி நகரங்களில் இடிபாடுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.