பேருந்து ஓட்டுநரை தாக்கிய ராணுவ அதிகாரிகள்..துப்பாக்கியை காட்டி மிரட்டல்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு வழிவிடாததால் பேருந்து ஓட்டுநரை தாக்கிய ராணுவ அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். நியாயம் கேட்க சென்றபோது துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது.
வேலூரில் இருந்து 3 வாகனங்களில் ராணுவ தளவாடங்களை ஏற்றிக் கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உதவி ஆய்வாளர் பிரதாப் தலைமையில் பெங்களூரு நோக்கிச் சென்றனர். அப்போது, ஓசூர் அருகே அரசு பேருந்து ஒன்று ராணுவ வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த ராணுவத்தினர் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை தாக்கியதால், ராணுவ வாகனங்கள் செல்லாதவாறு பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேருந்தில் பயணித்த பயணிகளும் ஓட்டுநருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, ராணுவ அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டனர். அப்போது, 5க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டினர்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ராணுவ அதிகாரி பிரதாப் மன்னிப்பு கேட்ட பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.