சுட்டு வீழ்த்தப்பட்ட சீனாவின் பலூன்கள் ஏன் இயக்கப்படுகின்றன? (வீடியோ)
அமெரிக்கா , கனடா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைக் குறிவைத்து சீனா உளவு பலூன்களை இயக்கியிருப்பதாக வாஷிங்டனைச் சேர்ந்த செய்தி நிறுவனம், தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களைச் சுமந்துசெல்லும் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டிருந்த `மான்டனா’ மாகாணப் பகுதிக்கு மேலே மர்ம பலூன் ஒன்று பறந்தது.
‘அந்த மர்ம பலூன் சீனாவினுடையது. உளவு பார்க்க இந்த பலூனை அனுப்பியிருக்கிறது’ என்று அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டியது.
சீனாவும், ‘வானில் பறந்த பலூன் எங்களுடையதுதான். வானிலை ஆய்வுக்காகப் பறக்கவிடப்பட்ட பலூன், காற்றின் வேகம் மாறுபடுதல் காரணமாக திசைமாறி அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டது’ என்று விளக்கமளித்தது.
அதன்பிறகு அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி சீனாவின் உளவு பலூன் எனக் கருதப்பட்டதை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
அதைத் தொடர்ந்து, கடந்த திங்களன்று அமெரிக்க அரசின் தூதரகத் துணைச் செயலர் வெண்டி ஷெர்மன் அமெரிக்காவிலுள்ள சுமார் 40 தூதரகங்களின் அதிகாரிகளுக்கு இது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைக் குறிவைத்து சீனா உளவு பலூன்களை இயக்கியிருப்பதாக வாஷிங்டனைச் சேர்ந்த செய்தி நிறுவனம், தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “சீனாவின் தெற்கு கடற்கரையில் ஹைனான் மாகாணத்துக்கு வெளியே பல ஆண்டுகளாக இயங்கிவரும் கண்காணிப்பு பலூன் அமெரிக்கா , கனடா, ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள ராணுவ சொத்துகள் பற்றிய தகவல்களைச் சேகரித்திருக்கிறது.
இந்தத் தகவல் பல பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடனான நேர்காணல்களை அடிப்படையாகக்கொண்டது.