பேனா சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்…தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு!
சென்னை மெரினா கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு தடை கோரி தமிழக மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், அவரின் நினைவிடத்துக்கு அருகில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பேனா சின்னம் 81 கோடி ரூபாய் செலவில், 42 மீட்டா் உயரத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் பேனா சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, கடலில் பேனா சின்னம் அமைக்க தடை விதிக்கக் கோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக் கோரியும் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கான பதில் மனுவில், அனைத்துத் துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை மெரீனா கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என மீனவர்கள் நல்லதம்பி, தங்கம், மோகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
மெரினா கடற்கரையை அரசியல்வாதிகள் கல்லறைத் தோட்டமாக மாற்றி வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடலில் பேனா சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.