பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆடையை அணிந்த பிரதமர் மோடி!
தான் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்ற வகையில் ஆடைகளை அணிந்து செல்பவர் பிரதமர் மோடி. அவர் எங்கு சென்றாலும், அந்த மண் சார்ந்த ஆடைகளையோ அல்லது பாரம்பரிய உடைகளையோ அணிந்து பங்கேற்பது வழக்கம். இந்த நிலையில், மக்களவை கூட்டத்தில் பங்கேற்ற மோடி, நீல நிற கோட் அணிந்து பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஆடையின் சிறப்பு என்னவென்றால், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடையாகும். சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த ஆடையை மோடிக்கு பரிசாக வழங்கியுள்ளது. இந்த கோட் கரூரில் உள்ள ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம், நெகிழி பொருட்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி இந்த ஆடையை அணிந்ததாக கூறப்படுகிறது. ‘நீல நிற ஆடையில் ஒரு பசுமை விழிப்புணர்வு’ என்று பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய மோடி, குடியரசுத் தலைவரின் உரை தொலைநோக்கு பார்வை கொண்டது என்றும் அதனை எதிர்க்கட்சிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பேச்சு, அவர்களின் தரத்தை காட்டுவதாக விமர்சித்த பிரதமர் மோடி, ஊடகங்களில் வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக அவரவர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர் எனக் கூறினார். வேலையிழப்பு, பொருளாதார பாதிப்பால் உலக நாடுகள் தள்ளாடும் நிலையில், அந்த பிரச்னையை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உள்ளதாக சுட்டிககட்டிய பிரதமர் மோடி, செல்போன் உற்பத்தி, எரிசக்தி துறை என ஒவ்வொரு துறையிலும் இந்தியா வரலாறு படைத்து வருவதாகக் கூறினார்.
ஆனால் நாட்டின் வளர்ச்சியை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் காங்கிரஸின் வெறுப்புணர்வு அரசியல் அம்பலமாகயுள்ளது என்றும் தெரிவித்தார். பத்து ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி ஊழல்களால் நிறைந்திருந்தது என குறிப்பிட்ட பிரதமர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டுகள் உலக அளவில் இந்தியா பலவீனமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளாக, எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விமர்சனத்தை முன்வைக்கவில்லை என்றும், கட்டாயமான விமர்சனத்தையே முன்வைத்து வருவதாகவும் கூறினார். தன் மீதான விமர்சனம் பிரச்னைகளை தீர்க்கும் என எதிர்க்கட்சியினர் நம்புவதாகவும் ராகுல் காந்தியை மறைமுகமாக சாடினார்.
”இந்தியாவின் அழிவு, ஹார்வர்டில் பல்கலைகழகத்தில் படிப்பினையாக இருக்கும் என ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, இந்திய காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்ற ஆய்வை ஹார்வேட்டு பல்கலைகழகம் மேற்கொண்டதாகவும், எதிர்காலத்தில், காங்கிரஸின் அழிவு ஹார்வர்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களிலும் ஆய்வு செய்யப்படும் என்றும் விமர்சித்தார். பிரதமர் மோடியின் பேச்சு திருப்தியளிக்கவில்லை என தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.