துருக்கி, சிரியாவில் நிலநடுக்க பலி 19300 ஆக உயர்வு…

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இன்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 19300 ஆக உயர்ந்தது. இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை உயிருடன் மீட்பதற்காக மீட்புப் படையினர் தங்கள் முயற்சியை தொடர்ந்தனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஒருபக்கம் ஆறுதலை அளித்தாலும், இந்த பேரழிவில் இருந்து உயிர்தப்பிய பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் குளிருக்கு மத்தியில் துயரங்களை எதிர்கொள்வது வேதனை அளிப்பதாக உள்ளது. வீடுகளை இழந்து நிர்கதியாக நிற்கும் மக்கள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.
துருக்கியின் அன்டாக்யா நகரில், குழந்தைகள் குளிருக்கு அணியக்கூடிய கோட்டுகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் ஒரு வாகனத்தின் முன் திரண்ட மக்கள் உதவி கேட்டு கதறினர். பேரழிவிற்குள்ளான பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றுமாறு உயிர் பிழைத்த ஒருவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தார்.
நிலநடுக்கத்ததால் வீடுகளை இழந்தவர்களில் பலர் அரசு அமைத்துள்ள கூடாரங்கள், மைதானங்கள் மற்றும் பிற தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருக்கின்றனர். கடும் குளிர் நிலவுவதால், ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர்காய்கின்றனர். அதேசமயம், கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பவர்கள் ஒருவேளை உயிரோடு இருந்தாலும், தற்போது நிலவும் கடுமையான குளிரால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.