வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை.

வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
சுமார் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்வதற்கு வடக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், அவர்களுக்கு தேவையான உருளைக் கிழங்கு விதைகளை இலகுவாக பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வடக்கில் சுமார் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர்செய்கைக்கு விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உருளைக் கிழங்கு விதைகளை இலகுவாக பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும், குறித்த திட்டம் வடக்கில் வெற்றியளிக்குமாயின், உருளைக் கிழங்கு இறக்குமதியை கணிசமான அளவு குறைத்து அந்நியச் செலாணியை மீதப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துடன், எதிர்காலத்தில் உருளைக் கிழங்கின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தீன்பண்டங்களை உற்பத்தி செய்யும் சர்வதேச தரத்திலான தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை வரவேற்ற ஜனாதிபதி, விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில் வடக்கு விவசாயிகளின் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் தேவையான உருளைக் கிழங்கு விதைகள் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.