ஆஸ்திரேலியாவை 91 ரன்களில் சுருட்டி இந்தியா அபார வெற்றி.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி தனது 9வது சதத்தை பதிவு செய்தார்.
அவர் 120 ரன்னும், ஜடேஜா 66 ரன்னும் (அவுட் இல்லை), அக்ஷர் படேல் 52 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். டாட் மர்பி 5 விக்கெட் கைப்பற்றினார்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 144 ரன்கள் முன்னிலை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது. ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. ஜடேஜா 70 ரன் எடுத்து இருந்த போது மர்பி பந்தில் ஆட்டம் இழந்தார். அவருக்கு கிடைத்த 6-வது விக்கெட்டாகும்.
ஜடேஜா 185 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 328 ரன்னாக இருந்தது. 8-வது விக்கெட்டுக்கு அவரும், அக்ஷர் படேலும் இணைந்து 88 ரன் எடுத்தது. அடுத்து முகமது ஷபி களம் வந்தார். இந்திய அணி தொடர்ந்து ரன்களை குவித்தது.
இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.