கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிப்பு!
யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது கைதானவர்கள் 18 பேர் மீதும் நீதிமன்றத் தடை உத்தரவை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டன.
அதேவேளை, கைதானவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.
பொலிஸார் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் சார்பான விண்ணப்பத்தை ஆராய்ந்த மேலதிக நீதிவான், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுவித்து கட்டளையிட்டதுடன், வழக்கை 22.02.2023 ஆம் திகதிக்குத் தவணையிட்டார்.