துருக்கி நிலநடுக்கத்தில் இந்திய இளைஞர் பலி!
துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாக கொண்டு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த கோர நிலநடுக்கம் இரு நாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 28,000ஐ கடந்துள்ள நிலையில்,இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலநடுக்கத்தில் மாயமான இந்தியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உத்தரக்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் என்ற 36 வயது இளைஞர் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நிறுவனத்தின் சார்பில் வேலை நிமித்தமாக ஜனவரி 22ஆம் தேதி துருக்கி சென்றுள்ளார்.
அங்கிருந்த மலாட்யா என்ற பகுதியில் உள்ள ஹோட்டலில் இவர் தங்கியிருந்த நிலையில், பிப்ரவரி 6 நிலநடுக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இவர் உடலில் உள்ள ‘ஓம்’ என்ற டாட்டூவை மயாமான நபர் இவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இவரின் மரணத்தை துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் உடல் இந்தியா கொண்டுவரப்படும் எனவும் தூதரம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த விஜய் குமாருக்கு பிங்கி கவுர் என்ற மனைவியும் 6 வயது குழந்தையும் உள்ளனர்.இவரின் மரணம் குடும்பத்தினரை நிலைகுலைய வைத்து ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.