யாழில் சுதந்திர தினத்தையொட்டிய கலாசார விழா! – படங்களை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப் பிரிவு.
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு , மாபெரும் இசைக் கச்சேரியுடன் கூடிய ‘யாழ்ப்பாணம் மாவட்ட கலாசார விழா’ நேற்றிரவு யாழ். கோட்டைக்கு அருகிலுள்ள முற்றவெளி திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
வடக்கு மாகாண தமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் கலாசார விழாவில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்ததோடு, இறுதியில் மாபெரும் இசைக் கச்சேரியும் நடைபெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு படங்களுடன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர் என்றும், இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய கலைஞர்கள் பலர் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்திய மத்திய மீன்பிடித்துறை துணை அமைச்சர் எல். முருகன், இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாலை யாழ். கலாசார நிலையத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சுதந்திர தின ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்வேறு நடன அம்சங்கள் இணைக்கப்பட்டிருந்ததுடன் வடக்கு மாகாண பாடசாலை மாணவ மாணவிகளும் இதில் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.