போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கும் தனிமைப்படுத்தல் மையம் தேவை.
வடக்கில் புனர்வாழ்வு மையம் ஒன்று அவசியம் – பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களை அதிலிருந்து விடுவித்து சமூகத்தில் இணைப்பதற்காக வடக்கில் புனர்வாழ்வ நிலையம் ஒன்று அமைப்பது அவசியம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கிளிநொச்சி சிந்தனையாளர் வட்டத்தில் இடம்பெற்ற விசேட கருத்தமர்வில் கலந்துகொண்டு வடக்கில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைய சில வருடங்களாக வடக்கில் பேதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பது செய்திகளின் ஊடாகவும், நேரடியாகவும் அவதானித்து வருகின்றோம். குறிப்பான இளம் சமூகம் அதிலும் மாணவர்கள் போதை பொருள் பாவனைக்கு அதிகம் உள்ளாவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது கசிப்பு, கஞ்சாவிலிருந்து ஹெரோயின், ஐஸ் போன்ற போன்ற அடுத்தக்கட்ட போதைப்பொருள் பாவனைக்கு சமூகம் சென்றுவிட்டது.
இது எங்கள் சமூகத்திற்கு ஆரோக்கியமனதாக இல்லை. சமூகத்தை பெரும் சீரழிவுக்கு கொண்டு சென்றுவிடும். ஹெரோயின் போன்ற போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பது மிக மிக கடினமான பணி. ஹெரோயினுக்கு அடிமையானவருக்கு அது கிடைக்கவில்லை என்றால் அவர் அதனை பெற்றுக்கொள்வதற்கு எதனை வேண்டுமென்றாலும் செய்வார். கொலை செய்யக் கூட தயங்கமாட்டார்கள்.
முக்கியமாக நீண்ட தூர பயணத்தில் ஈடுப்படுகின்ற பேரூந்து சாரதிகள் ஐஸ் போதைப்பொருளை அதிகம் பயன்படுத்துகின்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறே மாணவர்கள் மத்தியில் தற்போது போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதான தகவல் வெளிவந்தவண்ணமுள்ளன. அத்தோடு போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டவர்களை போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட விடமாட்டார்கள். அவர்கள் தங்களின் விற்பனை பரப்பை அதிகரித்துச் செல்லும் வகையில் தங்களின் வலைப்பின்னலை கொண்டிருக்கின்றார்கள்.
எனவேதான் இந்த சூழலிலிருந்து எமது சமூகத்தை மீட்கவேண்டிய நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம். அந்த வகையில்தான் வடக்கில் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் ஒன்றின் உருவாக்கத்தின் அவசியம் குறித்து அதன் எது நிலைகளை ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைய கொரோனா சூழலில் போதைப்பொருள் பாவனைக்குள்ளானவர்களை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல முடியாது. எனவேதான் வடக்கில் போதைபொருள் தடுப்பு புனர்வாழ்வு நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.