ரஸ்ய ஆயுதங்களால், ரஸ்யாவை வீழ்த்த திட்டமிடும் அமெரிக்கா
உக்ரைன் மீதான ரஸ்யப் படையெடுப்பு ஓர் ஆண்டை நெருங்கும் நிலையில் கள நிலவரம் இரு தரப்புக்கும் சாதகமற்றதாகவே விளங்குகிறது.
நேட்டோ நாடுகளின் ஆயுத விநியோகத்தை நம்பியிருக்கும் உக்ரைன் கிட்டிய கடந்த காலத்தில் ஒரு சில படைத்துறை வெற்றிகளைப் பெற்றிருந்த போதிலும், சுதாகரித்துக் கொண்ட ரஸ்யா தற்போது தனது தாக்குதல்களை அதிகரித்து உள்ளது.
உக்ரைனின் சக்தித் துறையை கிட்டத்தட்ட முற்றாகவே நிர்மூலம் செய்துள்ள ரஸ்யா, வக்னர் கூலிப் படையினரின் உதவியோடு களமுனையில் முன்னேறி வருவதை அவதானிக்க முடிகின்றது.
எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி படையெடுப்பின் ஓராண்டு நிறைவுக்கு முன்னதாக பாரிய வெற்றியொன்றைப் பதிவு செய்யும் முனைப்பில் ரஸ்யத் தரப்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.
மறுபுறம், ரஸ்யப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தத் தேவையான கனரக ஆயுதங்களைத் தந்துதவுமாறு மேற்குலகிடம் உக்ரைன் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றது.
தற்போதைய நிலையில் போரானது ரஸ்யாவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையிலான நேரடி மோதலாக படிப்படியாக விரிவடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. மேலும் மேலும் நவீன ரக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க நேட்டோ தயாராக உள்ள போதிலும், உரிய பயிற்சி இன்றி அவற்றைப் பாவிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல் ரஸ்யாவுக்குச் சாதகமான நிலையையும், உக்ரைனுக்குப் பாதகமான நிலையையும் தோற்றுவித்து உள்ளது.
கள நிலவரத்தை உக்ரைனுக்குச் சாதகமாக மாற்றுவதற்கான ஒரே வழி, உக்ரைன் படையினருக்குப் பரிச்சயமான படைத்துறைச் சாதனங்கள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதே என்பதை நன்கு உணர்ந்துள்ள அமெரிக்கா, தனது கொல்லைப்புறமாகக் கருதும் தென்னமெரிக்கப் பிராந்தியத்தில் உள்ள முன்னாள் சோவியத் மற்றும் ரஸ்யத் தயாரிப்பு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் உதவியை நாடியுள்ளது.
குறித்த நாடுகள் தம்மிடம் உள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் ஆயுதங்களுக்குப் பதிலாக பணமோ அல்லது அமெரிக்க ஆயுதங்களோ வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வாஷிங்டனில் நடைபெற்ற அட்லாண்டிக் கவுன்சில் கூட்டத்தில் இணைய வழியூடாக இணைந்து கொண்ட அமெரிக்க தெற்கு கட்டளையகத்தின் தளபதியான லவுறா றிச்சட்சன் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவரின் தகவல்களின் பிரகாரம் தென்னமெரிக்கப் பிராந்தியத்தில் உள்ள ஆறு நாடுகளிடம் இதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. எனினும் குறித்த ஆறு நாடுகள் எவை என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.
ஆனால், இந்தக் கோரிக்கையை குறித்த நாடுகள் சாதகமாகப் பரிசீலிக்கும் அறிகுறிகள் தென்படவில்லை எனப் பிராந்தியத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்னமெரிக்க, கரீபியன் பிராந்தியத்தில் ரஸ்யாவின் பலமான செல்வாக்கு வளையத்துள் கியூபா, வெனிசுவேலா மற்றும் நிக்கரகுவா ஆகிய நாடுகள் உள்ளன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக எதிர்த்துவரும் இந்த நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா தற்போது முன்வைத்துள்ள கோரிக்கையை குறித்த நாடுகள் பரிசீலனைக்கு எடுப்பதற்கு முன்நிபந்தனையாக பல ஆண்டுகளாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
அதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் தயாராக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு அமெரிக்கா தளர்வுகளை மேற்கொள்ள முன்வந்தாலும், ரஸ்யாவின் விருப்புக்கு மாறாக தம்மிடம் உள்ள ஆயுதங்களை அந்த நாடுகள் உக்ரைனுக்குக் கையளிக்க முன்வருமா என்பது பெறுமதிமிக்க கேள்வி.
இந்த மூன்று நாடுகள் தவிர, வேறு ஏழு நாடுகளில் உக்ரைனுக்குத் தேவைப்படும் கனரக ஆயுதங்களும், தாக்குதல் உலங்கு வானூர்திகளும் உள்ளதாகத் தெரிகின்றது. பெரு, மெக்சிகோ, ஆர்ஜென்ரீனா, கொலம்பியா, ஈக்குவடோர், பிரேசில் மற்றும் உருகுவே ஆகிய இந்த நாடுகள் அண்மைக் காலம்வரை ரஸ்யாவிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்துள்ளன.
இந்த ஏழு நாடுகளில் மெக்சிக்கோவும், ஆர்ஜென்ரீனாவும் தம்மிடம் உள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கப் போவதில்லை என வெளிப்படையாக அறிவித்து விட்டன.
கொலம்பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இடதுசாரி அரசாங்கங்கள் பதவியில் உள்ள நிலையில் அவை அமெரிக்காவின் கோரிக்கைக்குச் செவிசாய்க்குமா என்ற சந்தேகம் உள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் கியூபா, வெனிசுவேலா மற்றும் நிக்கரகுவா ஆகிய நாடுகளுக்கு அடுத்து ரஸ்ய ஆயுதங்களை அதிக அளவில் பெருவே கொண்டுள்ளது. அந்த நாட்டில் அமெரிக்க ஆதரவுடன் அண்மையில் தோற்றுவிக்கப்பட்ட அரசியல் நெருக்கடி கூட குறித்த ஆயுதங்களைப் பெற்று உக்ரைனுக்கு வழங்குவதற்கான அமெரிக்காவின் மறைமுகத் திட்டமாக இருக்கக் கூடும்.
பெரு நாட்டில் ஆட்சியாளராக இருந்த இடதுசாரித் தொழிற்சங்கவாதியான பெட்ரோ காஸ்ரில்லா அண்மையில் அமெரிக்க உதவியுடன் பதவியில் இருந்து அகற்றப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஆட்சியாளர் டினா பொலுவார்ட்டே தனது நன்றிக்கடனை நிறைவேற்றுவதற்காக தன்னிடமுள்ள ரஸ்ய ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க முன்வரக் கூடும். எனினும், அதிலும் கூட பல சட்டச் சிக்கல்கள் உள்ளதாகத் தெரிகின்றது.
அதேவேளை, அமெரிக்காவின் கோரிக்கையை அலட்சியம் செய்தால் என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது. 20ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல்வேறு காலகட்டங்களில் தென்னமெரிக்க நாடுகளில் தனக்குச் சாதகமாக ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. எவ்வாறு செயற்பட்டது என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. தற்போதும் தனக்கு வேண்டியவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக பழைய பாணியிலான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொள்ளுமா என்பதை அடுத்து வரும் நாட்களில் பார்க்க முடியும்.
இதேவேளை, தற்போதைய நெருக்கடி நிலையைச் சமாளிப்பது என்ற போர்வையில் தனது நீண்டகால நலன்களையும் நிறைவேற்றிக் கொள்ள அமெரிக்கா முயல்வது தெரிகின்றது.
ரஸ்ய ஆயுதங்களை வைத்துள்ள நாடுகள் தமக்குத் தேவையான உதிரிப் பாகங்களைப் பெற்றுக் கொள்வதில் தற்போது சிரமங்களை எதிர் கொள்கின்றன. போர் காரணமாகவும், பொருளாதாரத் தடைகள் காரணமாகவும் அவற்றை உற்பத்தி செய்வதிலும், விநியோகிப்பதிலும் ரஸ்யத் தரப்பில் நெருக்கடி உள்ளது. இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனையும் அமெரிக்கா, அந்த நாடுகளிடம் உள்ள ரஸ்யத் தயாரிப்பு ஆயுதங்களைப் பெற்று உக்ரைனுக்கு வழங்கிவிட்டு தனது தயாரிப்பு ஆயுதங்களை – தற்காலிகமாகவேனும் – குறித்த நாடுகளுக்குத் தந்துவிட்டால் அவை தொடர்ந்தும் அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்களிலேயே தங்கியிருக்கும் நிலையை உருவாக்கிவிடலாம் என அமெரிக்கா கணக்கிடுகிறது.
இதன் மூலம், அமெரிக்க வர்த்தகமும், அமெரிக்கச் செல்வாக்கும் விரிவடையும் அதேநேரம் ரஸ்யாவின் செல்வாக்கை தென்னமெரிக்கப் பிராந்தியத்தில் கணிசமாகக் குறைத்துவிட முடியும் என அமெரிக்கா நம்புகிறது.
நோக்கம் எதுவாக இருந்தாலும் அமெரிக்காவின் சிந்தனை ஒன்றேதான். அது எந்த வழியிலாயினும் ரஸ்யாவைத் தோற்கடிப்பது. அதற்குத் தேவையான அனைத்து வழிகளிலும் முயற்சி செய்ய அமெரிக்கா தயார். அதன் ஒரு அங்கமே தென்னமெரிக்கா நோக்கிய நகர்வு. அமெரிக்க முயற்சி வெற்றியளிக்குமா? பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.