நிலநடுக்கம் எதிரொலியால் துருக்கி, சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்கள்.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.
ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 100-க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவிட ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி நிலநடுக்கம் பாதித்த துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்து உள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டு உள்துறை மந்திரி நான்சி பீசர் கூறுகையில், பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மனிக்கு அழைத்து வரும் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களை ஜெர்மனிக்குள் வர அனுமதிக்க விரும்புகிறோம். அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வரலாம்.
இதற்காக விசா கெடுபிடிகள், அரசு விதிகள் ஆகியவை இருக்காது. இது அவசரகால உதவி என தெரிவித்துள்ளார்