புதுடில்லியின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றாரா நெடுமாறன்? – தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் பலரும் கேள்வி.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் திடீரென வெளியிட்ட அறிவிப்புத் தொடர்பில் பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அவரது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் இந்திய அரசின் – புதுடில்லியின் நோக்கத்தை அடைவதற்கு உதவும் வகையில் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தினர். இந்தச் செய்தியாளர் சந்திப்பில், பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாக நெடுமாறன் தெரிவித்தார்.
“விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம்வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற பிரபாகரன் அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியையும் பெறுவதில்லை என்பதிலும் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி, இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமா கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசை வேண்டுகின்றோம்” – என்று நெடுமாறன் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலையே அவர் முன்னெடுத்துள்ளதாகப் பல தரப்பினரும் குறிப்பிடுகின்றனர்.
இந்திய, இலங்கை மூத்த ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியப்பற்றாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் எனப் பலரும் நெடுமாறனின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசு, இலங்கை அரசுக்குத் தெளிவான செய்தியை முன்வைப்பதற்காகவே இவ்வாறானதொரு நாடகத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.