14 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த 4 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து 14 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 4 பேருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 18 ஆம் திகதி காலி தெற்கு கடற்படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்தமை தொடர்பில் 23 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காலி மேல் நீதிமன்றில் 2010ஆம் ஆண்டு நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் முதலாவது பிரதிவாதியான கந்தையா இளங்கோ, 2009 ஆம் ஆண்டு போர் முடிவின் பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், முதலாவது பிரதிவாதியால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம், 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற உண்மை விளம்பல் விசாரணையின் போது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் 2009 ஆம் ஆண்டு விமானப்படையால் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் முதலாவது பிரதிவாதி தனது வலது காலை இழந்துள்ளதுடன், 14 வருடங்களாக வழக்கு விசாரணை நிறைவு செய்யப்படாமை குறித்தும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி மன்றுக்கு எடுத்துரைத்துள்ளார்.
விடயங்களை ஆராய்ந்த காலி மேல் நீதிமன்ற நீதிபதி, 4 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கினார். 5 இலட்சம் ரூபா பெறுமதியான காசுப் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் பிரதிவாதிகளைச் செல்ல அனுமதித்தார்.
வழக்கு விசாரணையில் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முன்னிலையாகியதுடன், சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மொஹமட் பாரி மன்றில் தோன்றியிருந்தார்.