காதலர் தின பரிசு..பெண்ணை ஏமாற்றி ரூ.3.68 லட்சத்தை சுருட்டிய காதலன்..!
மும்பையைச் சேர்ந்த 51 வயதான திருமணமான பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அலெக்ஸ் என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார். சமீப காலத்தில் இருவரும் சமூக வலைதளம் மூலம் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இன்று காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அலெக்ஸ் அந்த பெண்ணுக்கு அழைத்து, “உங்களுக்கு விலை உயர்ந்த காதலர் தின பரிசை அனுப்புகிறேன். பரிசைப் பெற்றதும் நீங்கள் கட்டணமாக இந்திய மதிப்பில் 66,000 ரூபாய் செலுத்த வேண்டியது இருக்கும்” என்று கூறியுள்ளார்.
காதலனின் பரிசுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருந்தார் அந்த மும்பை பெண். சில நாட்களுக்கு முன்பு கூரியர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அனுமதிக்கப்பட்டதை விட பார்சல் அதிக எடை கொண்டதாக இருப்பதால் நீங்கள் கூடுதலாக 72 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி, மொத்த பணத்தையும் அந்த பெண் செலுத்தியுள்ளார்.
பின்னர், கூரியர் நிறுவனத்தின் பிரதிநிதி என்று தொடர்புகொண்ட நபர் ஒருவர், “பார்சலில் யூரோ பணம் உள்ளது. இது சட்டவிரோதமானது. ஆகவே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிக்க வைக்காமல் இருக்க ரூ.2.65 லட்சத்தை அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.இதனால் பயந்துபோன அந்த பெண் மொத்தமாக ரூ.3.68 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
ஆனாலும், அந்த பெண்ணிடம் மீண்டும் பணம் கேட்டு தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்த அந்த பெண் சுதாரித்துக்கொண்டார். பணம் அனுப்ப மறுத்த நிலையில், காதலன் போல பழகிய அலெக்ஸ் போனில் அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். பணம் அனுப்பாவிட்டால் உனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவேன், குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மும்பை கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 2 மர்ம நபர்கள் மீது மோசடி, தகவல் தொழில்நுட்ப மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் வலைவீசித் தேடி வருகிறார்கள்.