புலிகள் கேட்டது தனியான நாடு; நாம் கேட்பது அதிகாரப் பகிர்வு! – விக்கி விளக்கம்.
“விடுதலைப்புலிகள் கேட்டது தனியான ஒரு நாடு. நாம் கேட்பது அப்படியல்ல. நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை மட்டும் பகிர்ந்து கேட்கின்றோம்.”
இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தெற்கு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியின் போது தெரிவித்ததாவது:-
கேள்வி:- சமஷ்டி ஆட்சி முறைமையை நீங்கள் கேட்கிறீர்கள். இதனால் தனி நாடு கேட்கிறீர்கள் என்று சிங்கள மக்கள் கூறுகின்றார்கள். உண்மையில் சமஸ்டி ஆட்சி முறைமை என்பது என்ன?
பதில்:- ஒற்றுமை என்பதுதான் சமஷ்டி முறைமை. அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கும்போது அது சமஷ்டி. உதாரணத்துக்கு 10 ஏக்கர் நிலத்தில் தாய் வீடு ஒன்று இருக்கின்றது. அந்த வீட்டில் நான்கு பிள்ளைகள். அவர்கள் ஒருவருக்கும் தனித்தனியாக நிலம் பிரித்துக் கொடுக்கப்படுகின்றது. அவர்கள் அதில் வீடு அமைத்து விரும்பிய பயிர்களைச் செய்து வாழ்கின்றார்கள். ஆனால், தாய் வீட்டில் தாய், தந்தை இருப்பார்கள்.
இந்த நான்கு பிள்ளைகளும் தனித்தனியாக வீடு அமைத்துத் தோட்டம் செய்து வந்தாலும் நால்வரும் தாய் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள். அதுதான் சமஷ்டி.
இந்த விடயத்தில் தெற்கில் வேறாகவும் வடக்கில் வேறாகவும் நடத்துகின்றார்கள்.
மாகாண சபையில் தெற்கில் இருக்கும் முதலமைச்சர்கள் நிதியை வைத்திருக்க முடியும். வடக்கு முதலமைச்சராக நான் இருந்தபோது அந்த உரிமை எனக்கு வழங்கப்படவில்லை.
வடக்கில் ஏதாவது பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும்போது ஏதாவது காரணத்தைச் சொல்லி தடை விதிக்கிறார்கள்.
ஆனால், அதிகாரம் எங்களிடம் இருந்தால் நாங்கள் அதைச் செய்துகொள்வோம். இதற்காகத்தான் சமஷ்டியைக் கேட்கின்றோம்.
கேள்வி : நீங்கள் பொலிஸ் அதிகாரம் கேட்பது ஏன்?
பதில்:- அங்கே சிங்கள பொலிஸார்தான் இருக்கின்றார்கள். இதனால் மொழிப் பிரச்சினை ஏற்படுகின்றது. ஒருவர் பொலிஸ் நிலையம் சென்று தமிழில் முறைப்பாடு பதிவு செய்கின்றபோது சிங்களத்தில் ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்கின்றார்.
இதனால் இவர் கூறிய அத்தனை விடயங்களும் திரிவுபடுத்தப்படுகின்றன. இதனால் முறைப்பாட்டாளர் பாதிக்கப்படுகின்றார்.
கேள்வி:- இதுபோன்ற சிறிய நாட்டுக்குள் சமஷ்டி தேவைதானா?
பதில்:- சுவிஸ்டார்லாந்த் இலங்கையில் மூன்றில் ஒரு பங்கு. அங்கு பத்து மக்கள் பிரிவுகள் உள்ளனர். அவர்கள் அவர்களை அவர்களாவே நிர்வகிப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நாடு துண்டு துண்டாகப் பிரிந்து செல்லவில்லை.
அங்கு 20 மாகாணங்கள் உள்ளன. இங்கு இருப்பதோ ஒன்பது. அந்த நாட்டால் இது முடியும் என்றால் ஏன் இலங்கையால் முடியாது? நாம் நாட்டைப் பிரிக்கச் சொல்லவில்லை. அதிகாரத்தைத்தான் பகிரச் சொல்கின்றோம்.
கேள்வி:- நீங்கள் கேட்பது புலிகள் கேட்ட தமிழீழம் போன்றதா?
பதில்:- இல்லை. அவர்கள் கேட்டது தனியான ஒரு நாடு. நாம் கேட்பது அப்படியல்ல. நாட்டைப் பிரிக்காமல்
அதிகாரத்தை மட்டும் பகிர்ந்து கேட்கின்றோம்.
அமரிக்கா, கனடா, இந்தியா போன்ற நாடுகள் சமஷ்டி ஆட்சி முறையைக் கொண்ட நாடுகள். அவை தனிநாடாகப்
பிரியவில்லை. ஆனால், இந்த சமஷ்டி முறைமையை தனி நாடு என்றே எல்லோரும் எண்ணி இருக்கின்றார்கள்.