சீனாவின் வான்பரப்பில் உளவு பலூன் பறக்கவில்லை- அமெரிக்கா மறுப்பு.
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் அட்லாண்டிக் கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் அதை சீனா மறுக்கிறது.
அதன்பின்னர் அமெரிக்காவில் கடந்த 10-ந்தேதியும், நேற்றும், நடுவானில் பறந்த 2 மர்ம பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. கனடாவிலும் மர்ம பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தபட்டுள்ளது. இதற்கிடையே சீனா வான் எல்லைக்குள் அமெரிக்காவின் பலூன்கள் 10 முறைக்கு மேல் அனுமதியின்றி பறந்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியது.
2022-ம் ஆண்டு ஜனவரி முதல் சீனா வான்பரப்புகளில் அமெரிக்க ராட்சத பலூன்கள் பறந்ததாகவும், அதனை பொறுப்புடன் தொழில் ரீதியாக அணுகியதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கெர்பி கூறும்போது, ‘சீனாவின் மீது அமெரிக்கா கண்காணிப்பு பலூன்களை பறக்கவிடவில்லை.
சீன வான்வெளியில் நாங்கள் எந்தவித பலூன்களையும் நாங்கள் அனுப்பவில்லை’ என்றார். வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கரீன்-ஜூன் பியர் கூறும் போது, ‘அமெரிக்க வான்பரப்பில் பறந்த மர்ம பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அது வேற்றுகிரக வாசிகள் அல்லது வேற்று கிரக நடவடிக்கைகள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதுகுறித்து கேள்விகள் மற்றும் கவலைகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அது வேற்றுகிரக வாசிகள் அல்ல’ என்றார்.