வயிற்று வலியால் துடித்த பெண்.. ஸ்கேன் செய்துபார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்!
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் வயிற்று வலிக்கு சிகிச்சைக்கு எடுப்பதற்காக என்.டி.ஆர் மாவட்டம் மயிலவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்பப்பை சேதமடைந்துள்ளதாகவும் இதனை உடனே அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து கர்பப்பை அகற்றுவதற்கு அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது தெரிந்தோ தெரியாமலோ ஒரு மீட்டர் நீளமுள்ள சர்ஜிகல் கிளாத் எனப்படும் துணியை அந்தப்பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டுவிட்டனர். அந்தப்பெண்ணும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்து 8மாதங்கள் கடந்துவிட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அந்தப்பெண்ணுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அலைந்தும் பலனில்லை. இதனையடுத்து விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அப்போது வயிற்றுக்குள் எதோ ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அப்போது அவருடைய வயிற்றுக்குள் சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள சர்ஜிகல் கிளாத் இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் சர்ஜிகல் கிளாத்தை அவருடைய வயிற்றில் இருந்து எடுத்த டாக்டர்கள் அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் அலட்சியம் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.