ரணில் இருக்கும் வரைக்கும் தேர்தல் எதுவும் இடம்பெறாது! – இப்படிக் கூறுகின்றார் சுமதிபால.
“பணம் இல்லை எனத் தெரிவித்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் எந்தத் தேர்தலும் இடம்பெறாது. அதனால் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு யாருக்கும் இடமளிக்கக்கூடாது.”
இவ்வாறு சுதந்திர மக்கள் கூட்டணியின் செயலாளர் திலங்க சுமதிபால எம்.பி. தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறுமா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்திருப்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்குப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. என்றாலும் எதுவும் கைகூடவில்லை. தற்போது தேர்தல் செலவுக்குப் பணம் வழங்குவதற்கு பணம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காரணத்தை அடிப்படையாக்கொண்டு தேர்தல் பிற்போடப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ இடம்பெறாது.
தேர்தல் நடத்துவதற்குப் பணம் இல்லை எனத் தேர்தல் நடத்துவதற்குப் பாெறுப்பான நிறுவனம் தெரிவிப்பதாக இருந்தால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் எந்தத் தேர்தலும் இடம்பெறாது.
அதனால் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை பறிப்பதற்கு யாருக்கும் இடமளிக்க முடியாது.
அத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான அனைத்து கடதாசிகளும் தற்போது போதுமாளவு இருப்பதாகவும், தேர்தலுக்குத் தேவையான பத்திரங்கள் இதுவரைக்கும் சில மாவட்டங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பாக 7 மாவட்டங்களுக்குத் தேவையான தபால் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளன என்று அரசாங்க அச்சக பிரதானி தெரிவித்திருக்கின்றார்.
எனவே, பணம் இல்லை என்ற காரணத்துக்காக உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசுக்கு இடமளிக்கக்கூடாது. தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பாக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.