அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்து சென்றவர்கள் யார்?

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் நேற்றுமுன்தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வந்தவர்கள் நேற்றுப் பிற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
விமானத்தில் வந்தவர்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்திடம் ஊடகங்கள் வினவிய போதிலும், அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க தூதரகம் மறுத்துவிட்டது.
கிரேக்கத்தின் அமெரிக்க விமானப் படை முகாமொன்றிலிருந்து இரண்டு விசேட விமானங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்க வந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஒரு விமானம் மாலை 6.58 மணிக்கு இலங்கைக்கு வந்துள்ளதுடன், மற்றைய விமானம் 7.10 மணிக்கு விமான நிலையத்தை அடைந்துள்ளது.
இந்த விமானங்கள் யுத்த உபகரணங்களைக் கொண்டு போக்குவரத்துச் செய்யும் மிகப்பெரிய சரக்கு விமானங்களாகும்.
உயர்மட்ட இராஜதந்திரிகள் உள்ளிட்ட 29 பேர் இந்த இரண்டு விமானங்களிலும் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
அமெரிக்க ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசுபிக் பாதுகாப்பு விடயத்துக்குப் பொறுப்பான தலைமை பிரதி உதவி பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த இரண்டு விமானங்களும் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளன.