“எந்த சூழ்நிலையிலும் சாதி கலவரங்கள் நடைபெற கூடாது..” – மு.க.ஸ்டாலின் உத்தரவு!
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மண்டல அளவிலான சட்டம் ஒழுங்கு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், சேலத்தில் முன்பு பிரசித்தி பெற்று விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ முன்பு செல்பி எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 4 மாவட்டங்களில் பதிவான வழக்குகள், அவற்றின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா மற்றும் 4 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர்.
எந்த சூழ்நிலையிலும் சாதி கலவரங்கள் நடைபெறாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்று சட்டம் – ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய முதல்வர், போதைப்பொருள் ஒழிப்பில் காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலையங்களில் அடிக்கடி நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
வழக்குகளை காவல்துறையினர் விரைந்து முடித்தால் தான் மக்களின் நன்மதிப்பை பெற முடியும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.