நன்கொடையாளர்கள் கொடுக்கும் மருந்துகளை திருடி விற்ற மருந்தாளுனர் கைது!
மஹரகம அபேக்சா வைத்தியசாலை மருந்துகளை திருடி, புற்றுநோயாளிகளுக்கு விற்பனை செய்த சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹரகம அபேக்சா வைத்தியசாலைக்கு நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட மருந்துகளை திருடி புற்று நோயாளர்களுக்கு 20,000 ரூபாவிற்கு விற்பனை செய்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (16) உத்தரவிட்டார்.
குறித்த சந்தேக நபர் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு 22,000 ரூபாவிற்கு மருந்தை விற்பனை செய்ய சம்மதித்து பின்னர் 21,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், சந்தேகநபரின் வீட்டை அதிகாரிகள் சோதனையிட்ட போது, 425,970 ரூபா பணம் மற்றும் அதே வகை மருந்துகள் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் அரச முத்திரை பொறிக்கப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், நன்கொடையாளர்கள் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கும் மருந்துகளுக்கு இந்த முத்திரை பயன்படுத்தப்படுவதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது வாடிக்கையாளர் மருந்தாளுனராக பணிபுரிவதால், அவர் தனது வீட்டில் நடத்தும் மருந்தகத்திற்கு இந்த மருந்துகளை வைத்திருந்ததாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கைதாகியுள்ள சந்தேக நபருக்கு மருந்தாளுனராக பணிபுரிவது தொடர்பான உரிமம் எதுவும் இல்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இங்கு தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.