கராச்சி காவல்துறை தலைமையகம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை பயங்கரவாதிகள் இன்று திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
முதலில் கையெறி குண்டுகளை பிரதான வாயிலில் வீசி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். அவர்களை உள்ளே முன்னேற விடாமல் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர்.
இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், போலீசார் 15 பேர் காயமடைந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நீடிப்பதால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கராச்சி காவல் தலைமையகம் தாக்குதலுக்குள்ளானதை காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எத்தனை பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தாக்குதல் நடைபெறும் கராச்சி காவல்துறை அலுவலகம் கராச்சி நகரத்திலிருந்து விமான நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலைக்கு அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.