இன்று மங்கலம் தரும் மகா சிவராத்திரி விரதம்…

ராத்திரி என்ற பெயரோடு அழைக்கப்படும் விரதங்களில் சிவனை துதித்து வணங்கப்படும் விரதமே சிவராத்திரியாகும். சிவராத்திரி நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகாசிவராத்திரி ஆகும். இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எண்ணி முழு நாளும் வழிபடும் சிறப்பான விரதம் இந்த சிவராத்திரி ஆகும்.

அலை பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம் பொருளிடம் ஒடுங்கும் இந்த ராத்திரி மங்கலமான ஒளி சிந்தும் ராத்திரியாகும். நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனது சிந்தனையோடு இறையன்பில் மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் இடையூறுகள் நம்மை எதுவும் செய்வதில்லை.

உலகினில் உள்ள எல்லா பொருட்களுமே மாயையிடம் ஒடுங்கும். அப்படி மகா சக்தியிடம் ஒடுங்கும் காலம் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலம் மகா பிரளயம் என்று சொல்லப்படுகின்றது. உலகம் எத்தனை காலம் இருக்கின்றதோ அத்தனை காலமும் பிரளயமும் உண்டு.

இந்த காலத்தில் தான் உமாதேவி நான்கு காலமும் சிவனைப் பூஜித்தார். முழு முதற் கடவுளான சிவபெருமான் மனம் இறங்கி உமாதேவியை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அம்மையார் நான் தங்களை மனமுவந்து பூஜித்த இந்த நாள் சிவராத்திரி எனப் பெயர் பெற வேண்டும்.

இந்த தினத்தில் உங்களை முழு மனதோடும் பயபக்தியோடும் பூஜிப்பவர்கள் தங்கள் அருளினால் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அதனால் தான் சிவராத்திரி சிவ பூஜைக்கு சிறந்த நாளாகக் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

சிவராத்திரி பற்றி பல கதைகள் மூலமாகவும் சிவராத்திரி மகிமை கூறப்படுகின்றது. சிவராத்திரியன்று நான்கு ஜாமங்களுக்கும் தனித்தனியான பூஜை முறைகள் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. அதைக் கடைப்பிடித்தால் அனைத்துப் பலன்களையும் பெற முடியும்.

முக்கியமாக அன்று நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது அபிஷேகம். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குறியது. அடுத்தது லிங்கத்துக்குக் குங்குமம் அணிவித்தல். இது நல்லியல்புகளையும் பலன்களையும் குறிக்கிறது.

மூன்றாவது பல்வேறு வகையான உணவுகளைச் சிவபெருமானுக்கு நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. இது வாழ்க்கையில் நீண்ட ஆயுளையும் நம்முடைய விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவதையும் குறிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.