திருநெல்வேலியின் அடையாளமான பத்தமடை தங்கநூல் கோரைப்பாய்

திருநெல்வேலி என்றதும் அல்வா என்பது போல, திருநெல்வேலியின் இன்னொரு சிறப்புத்தான் பத்தமடைப்பாய். தமிழ்நாட்டில் பரவலாக பாய்கள் நெய்யப்பட்டு வந்தாலும் பத்தமடை பாய்க்கு மார்கெட்டில் இருக்கும் மவுசு தனிதான்.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய ஊர்தான் இந்த பத்தமடை. இந்த ஊரின் தாமிரபரணியின் கரையோரத்தில் வளரும் கோரைப்புற்களால்  பாய் நெய்யப்படுகிறது. இந்தச் சிறிய ஊரில் தயாராகும் பாய்க்கு ரஷ்ய ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி, விக்டோரியா மகாராணி போன்றவர்களின் பாராட்டும் கிடைத்துள்ளது. கைவினைப்பொருட்கள் பிரிவில் தேசிய விருதும் பல முறை பெற்றுள்ளவர்கள் இந்த ஊரை சேர்ந்த பாய் தயாரிப்பில் உள்ளவர்கள்.

 

தாமரபரணி நதிக்கரையில் வளரும் கோரைப்புற்களை எடுத்து, தண்ணீரில் ஊறவைத்து அதை எடுத்து பாயாக நெய்வார்கள்.  எத்தனை நாளைக்கு தண்ணீரில் ஊறிக்கிடக்கிறதோ அத்தனைக்கு அதன் தரம் மாறுபடும். பாயில் விலை அதன் தரத்தை பொறுத்து ரூபாய் 10 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை விலை உண்டு. பாய் நெய்ய பருத்தி நூலை பயண்படுத்துவது போல தங்க நூலால் நெய்யும் பாய் இங்கு மிகவும் பிரசித்தம். நமது கைப்பையில் அத்தகைய பாயை வைத்து கொள்ளலாம். பத்தமடை பாய்களில் இயற்கை சாயம் சேர்ப்பதே வழமை. இருப்பினும் நாகரீக உலகிற்கு ஏற்ப தற்போது சாயம் சேர்த்து பல நிறத்தில் பாய் தாயாரிக்கின்றனர்

தமிழகத்தில் பாய் என்பது எல்லா தமிழர்கள் வீட்டிலும் பயண்படுத்தும் அத்தியாவசிய பொருள் ஆகும். இருந்து சாப்பிட துவங்கி, கிடந்து உறங்க, தமிழர் வீட்டு திருமண செய்முறை வழங்க என பாயில்லா வீடுகள் இருக்காது. பிராமணர்கள், இஸ்லாமியர்கள் வீடுகளில் பெண்களை திருமணம் முடித்து கொடுக்கையில் கட்டில், மெத்தைக்கு பதில் கொடுக்கும் பொருள் பாய் ஆகும். அது ஒரு மத கலாச்சார வழக்கவும் கூட.

உலகமெங்கும் ஏற்றுமதியான பாய் ஊர் பத்தமடை, தற்போது களை இழந்து தான் காணப்படுகிறது. இந்த தொழில் மூன்று தலைமுறையாக இருக்கும் வியாபாபாரியின் கருத்துப்படி வேலைக்கு தொழிலாளர்கள் இல்லை என்கிறார்.
இந்த தொழிலை முன் நின்று நடத்துவது இஸ்லாமிய சகோதரர்கள் ஆவர். புல்லை வளர்ப்பது, பாய்க்கு தகுந்த போல் உருவாக்குவது, மெனையுவது, விற்பது என பல அடுக்கு மனிதர்கள் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்
அங்கைய எல்லா வீட்டிலும் ஒரு தறி கிடக்கிறது. 8 க்கு 8 அறையில் நான்கு பெண்கள் குழுமியிருந்து கதை பேசிக்கொண்டே வேலைசெய்தும் சம்பாதித்தும் வந்தனர்.
கால மாற்றம் பல பெண்கள் தற்போது இந்த தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. எட்டிலிருந்து 12 மணி நேரம் ஒரே இடத்தில் இருந்து செய்வதால் பல பெண்களுக்கு கால், இடுப்பு , பிரச்சினையில் இருப்பதாக கூறுகின்றனர்.

90 களில் குடும்பத்திற்கு ஒரு ஆள் அரபு தேசங்களில் வேலை செய்ய ஆரம்பிக்க பணம், வசதி வாய்ப்பில் முன் வந்ததும், தங்கள் வீட்டு பெண்கள் வேலை செய்வதை பல ஆண்கள் விரும்பவும் இல்லை என்றும் இத்தொழிலில் பல தலைமுறையாக உள்ள வியாபாரி கூறுகிறார்.

கூலியும் காலத்திற்கு ஏற்ப கூட்டவில்லை என்றும் குறிப்பிடுகின்றர் தொழிலாளிகள்.
இந்த தொழிலில் உள்ள பெண்களின் ஊட்ட சத்து குறைபாடு, சுகாதாரம் மேன்மைப்படுத்த   கவனித்திருந்தால் பெண்கள் இத் தொழிலை வெறுத்திருக்க மாட்டார்கள்.
சீனா பொருட்களாக  பிளாஸ்டிக் பாயும் சேர்ந்து வந்ததோடு பலர் இயற்கை பாயை விட்டு செயற்கை பாயிலும் தஞ்சம் அடைந்தனர். நெல்லையை சுற்றி பெரும் அங்காடிகள் வந்ததும் பெண்களுக்கு விற்பனை சார்ந்த தொழிலில் மாதம் கையில் 6000 கிடைக்கும் வாய்ப்பு வந்ததும் பலர் இந்த கைத்தொழிலையும் கைவிட்டு விட்டனர்.

இந்த நாணல் புல்லை கொண்டு போய் காவேரிக்கரையில் வளர்த்து பாய் தொழிலை திருச்சி, சேலம் பக்கம் செழிக்க செய்தனர்.  இருந்தாலும் திருநெல்வேலி தாமிரபரணி பாயளவு தரம் கிடைக்கவில்லை.  காரணம் இங்கு ஓடும் தாமிரபரணி தண்ணீரின் சிறப்புத்தான்.

பத்தமடை பாய் என்றால் ஜீவநதி தாமிரபரணி. ஜீவநதியின் கரையோர பட்டணம் திருநெல்வேலி என்றால் பத்தமடைப்பாய்.

Leave A Reply

Your email address will not be published.