13 இற்கு எதிரான பிக்குகளின் எதிர்ப்பை புரிந்துகொள்ள முடியவில்லை! – இப்படிச் சொல்கின்றார் ரணில்.
“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தீயிட்டு எரித்து பௌத்த பிக்குகள் அவ்வாறு ஏன் நடந்து கொண்டார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் பௌத்த பிக்குகள் நடத்திய போராட்டம் தொடர்பிலும், அவர்கள் ஜனாதிபதிக்கு விதித்துள்ள காலக்கெடு தொடர்பிலும் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதி ரணிலிடம் கேள்வி எழுப்பினார்.
“பௌத்த பிக்குகள் எமது நாட்டில் எல்லோராலும் புனிதத்தன்மையோடு மதிக்கப்படுபவர்கள். அவர்களின் இந்த அவசர நடவடிக்கை தொடர்பில் என்னால் ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை.
அண்மையில் மகாநாயக்கர்களை நேரில் சந்தித்தபோது அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் இலங்கையில் ஏற்படவுள்ள இன – மத நல்லிணக்கம் தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தேன். அவர்களும் எனது கருத்தை வரவேற்றிருந்தார்கள்.
அதன் பின்னர் கொழும்பில் பெரும் போராட்டத்தை பிக்குகளில் ஒரு பகுதியினர் நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தை அரசமைப்பு ரீதியில் கையாள்வேன்” – என்றார்.