ஒரே நேரத்தில் ஏற்றப்பட்ட 18 லட்சம் அகல் விளக்குகள்… சிவராத்திரியில் உலக சாதனை..!

மகா சிவராத்தி விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரியை ஒட்டி பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினியில் மகாகாலேஸ்வர் கோயில் உள்ளது.

12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இங்கு மகா சிவராத்திரி விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த விழாவில் கின்னஸ் உலக சாதனை ஒன்றும் படைக்கப்பட்டது. அங்குள்ள ஷிப்ரா நதிக்கரையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 21 லட்சம் விளக்குகளை ஏற்றினர். இதில் ஒரே நேரத்தில் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றி மக்கள் வழிபட்டனர். இது புதிய கின்னஸ் சாதனையாகும்.

இதற்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த தீபாவளி அன்று 15 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதே கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது. இந்த சாதனையை தற்போது உஜ்ஜயினி மகாகாலேஸ்வர் கோயிலில் முறியடித்து புது சாதனை படைத்துள்ளனர். இந்த விழாவில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் குடும்பத்துடன் பங்கேற்று விளக்கேற்றினார். பின்னர், அவரிடம் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் குமார் புருஷோத்தம் செய்தார். மகா சிவராத்தி நாள் அன்று சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் மகாகாலேஸ்வர் கோயிலுக்கு வருகை தந்தனர். நிகழ்வை ஒழுங்குபடுத்தும் பணியில் 22,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.