ஓலா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்… 3,111 பேருக்கு வேலை ரெடி..!
வேலூர் மாவட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 30 கோடி ரூபாயில் அமைய உள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் வேலூர் சுற்றுவட்டாரத்தில் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் 7,614 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆலைகளை ஓலா நிறுவனம் அமைக்க உள்ளது. இதன் மூலம் 3, 111 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதி உயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், சென்னையில் நிறுவப்பட்டுள்ள ஜி.எக்ஸ். குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.