குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண்… வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன்..!
ஒடிசா மாநிலத்தின் கியோஞ்ச்ஹார் மாவட்டத்தில் உள்ள திமிரியா என்ற கிராமத்தில் ஒரு பெண் தனது குழந்தைகளுடன் வீட்டின் முன் உள்ள மாமரத்தின் அடியில் வசித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். இதுகுறித்து விசாரித்தபோது தான் அதிர்ச்சி தகவல் அம்பலமானது.
மரத்தின் கீழ் தங்கியுள்ள பெண்ணின் பெயர் ஜானகி தெஹூரி. பழங்குடி இனத்தை சேர்ந்த இந்த பெண்ணுக்கு ரவி என்ற நபருடன் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்குப் பின் தொடர்ந்து ஓராண்டு கூட இடைவெளி இல்லாமல் இதுவரை 11 குழந்தைகளை பிரசவித்துள்ளார் ஜானகி. இதில் ஒரு குழந்தை மட்டும் உயிருடன் இல்லை.
தற்போது 5 ஆண் குழந்தை, 5 பெண் குழந்தைகளுடன் இருக்கும் இந்த பெண் ஜானகிக்கு குடும்ப கட்டுப்பாடு குறித்து மருத்துவர்களும், ஆஷா ஊழியர்களும் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன் பேரில் பெண் ஜானகி கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அன்று குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் இது தொடர்பாக இவர் முன்னதாக கணவரிடம் தெரிவிக்கவில்லை.
குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டு வீடு திரும்பிய மனைவி மீது ஆத்திரம் கொண்ட கணவர் ரவி, தனது மனைவியின் செயலால் இனி தெய்வங்களை வழிபடும் புனித தன்மை சீர் குலைந்து போனதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். இதனால், மனைவி ஜானகி ஆதரவின்ற மரத்தடியில் வசித்து வருகிறார்.
ஜானகியின் அவல நிலை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சுகாதார நலன் குறித்து ஜானகியின் குடும்பத்தார் மற்றும் உள்ளூர் மக்களுக்கு புரிதலை ஏற்படுத்தி பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.