இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சிரியா மக்கள் 5 பேர் பலி.

சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்சில் உள்ள அல்-சோக்னா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த மக்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 53 பேர் பலியாகினர்.
பலர் படுகாயம் அடைந்தனர். சிரியாவில் கடந்த ஓர் ஆண்டில் நடந்த மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். இதற்கிடையே, சிரியாவின் அண்டை நாடான இஸ்ரேல் அங்கு வான்தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிரியா, இஸ்ரேல் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாகக் கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளைக் குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது.
இந்நிலையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் அங்குள்ள ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 15 பேர் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.