’13’ சட்டவிரோதமான சட்டம் இல்லை;பிக்குகள் புரிந்துகொள்ள வேண்டும்! – ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டு.
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது சட்டவிரோதமான சட்டம் அல்ல. இதைப் பௌத்த பிக்குகள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜே.ஆர்.ஜயவர்தனவும் ராஜீவ் காந்தியும் இணைந்து உருவாக்கியதுதான் இந்த 13 ஆவது திருத்தச் சட்டமும், அதன் அடிப்படையிலான மாகாண சபை முறைமையும்.
இதில் பிரச்சினை என்னவென்றால் காணி – பொலிஸ் அதிகாரம்தான். இது சம்பந்தமாகப் பெரும்பான்மையான மக்கள் சந்தேகத்துடன் பார்ப்பதுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம்.
காணி – பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் இப்படி இப்படியான ஆபத்துக்கள் ஏற்படும் என்று தெற்கு மக்களுடன் சேர்ந்து பௌத்த பிக்குகளும் நினைக்கின்றனர்.
எனவே, நாடு பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இந்த 13 ஆவது திருத்தம் பற்றிப் பேச வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது.
மக்கள் மூன்று வேளையும் உண்ண முடியாத நிலையில் உள்ளனர். இதனால் 13 பற்றிப் பின்னர் பேசலாம் என்பதே எமது நிலைப்பபாடு.
அதற்கு முன் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குமுன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்” – என்றார்.