அதிகாரப் பகிர்வுக்கு அவசரம் வேண்டாம்! – சஜித் அணியின் அறிவுரை இது.

அதிகாரப் பகிர்வு விடயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-
“ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழ் வாக்குகளை அபகரிப்பதற்கு அதிகாரப் பகிர்வு என்ற துருப்புச் சீட்டை அவர் பயன்படுத்துகின்றார் போல் உள்ளது.
அவர் மறைமுகமான அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் வேலை செய்கின்றார். ஆகவே, அரசியல் தீர்வு விடயத்தில் – அதிகாரப் பகிர்வு விடயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்றே நாங்கள் சொல்கின்றோம்.
பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே தேர்தல் வேண்டாம் என்று கூறுகின்ற அரசு, ஏன் அதிகாரப் பகிர்வு விடயத்தில் மாத்திரம் அவசரம் காட்டுகின்றது?” – என்றும் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.