பிரதமர் மோடியின் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு – மேகாலயா சர்ச்சை
மேகாலயாவில் பிரதமர் மோடியின் பரப்புரை கூட்டத்திற்கு அரங்கு மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கு வருகிற 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. அசாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்து பலமாக காலூன்றி இருக்கும் பா.ஜ.க. தேர்தலை எதிர்நோக்கியுள்ள மேகாலயா மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.
இதையடுத்து வருகிற 24 ஆம் தேதி துரா பகுதியில் பிரதமர் மோடியின் பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பி.ஏ.சங்மா அரங்கில் நடைபெறவிருந்த இந்த கூட்டத்திற்கு கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி அனுமதி மறுத்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அனுமதி அளிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
துரா பகுதியில் பி.ஏ.சங்மா அரங்கில் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதனை சுட்டிக்காட்டி பிரசார கூட்டத்துக்கு மேகாலயா அரசு அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி 24 பிரதமர் மோடி பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. மாற்று இடத்தில் பிரச்சார கூட்டம் நடைபெறும் என , மேகாலயா பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.