சமஷ்டி மூலம்தான் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் எண்ணுவது தவறானது! – பிரதமர் கருத்து.
“இலங்கை ஒற்றையாட்சியுள்ள ஒரு நாடாகும். இதனை மாற்றியமைக்க முடியாது. சமஷ்டி மூலம்தான் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் எண்ணுவது தவறானது.” இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களைப் பகிர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். பிரதான ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இதற்கு முழுமையான ஆதரவு.
இந்த நிலையில், இதனைக் குழப்பியடிக்கும் வகையில் தமிழ் அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நடைமுறைக்குச் சாத்தியமான விடயங்களைப் பேசுவதை நிறுத்திவிட்டு அரசுடன் ஒன்றிணைந்து பயணிக்கத் தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்.
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் அனைவரினதும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். இதன்போது நிபந்தனைகளை முன்வைப்பது நல்லதல்ல” – என்றார்.
ஒற்றையாட்சிக்குள்ளே அதிகபட்ச அதிகாரத்தை பகிரத் தான் தயாராக இருக்கிறார் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெப்ரவரி 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்க உரையில் தெரிவித்திருந்தார்.
அதனைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருந்தனர். ஒற்றையாட்சிக்குள் உச்ச அதிகாரப் பகிர்வு என்பது சாத்தியமற்றது, எனவே சமஷ்டி அடிப்படையிலான தீர்வை மட்டுமே ஏற்போம் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னரே பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரப் பகிர்வு என்று தெரிவித்திருக்கின்றார்.