தேர்தலை நடத்தக் கோரி சபைக்குள் ஆர்ப்பாட்டம்! – ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள் சபைக்குள் இன்று போராட்டம் நடத்தியதால், நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்குச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. ஆரம்பகட்ட சபை நடவடிக்கை முடிவடைந்த பின்னர், எதிரணி உறுப்பினர்கள் சபைக்கு நடுவே வந்தனர்.
“தேல்தலை உடன் நடத்து”, “தேர்தலை நடத்த நிதி வழங்கு”, “கள்வர்களின் அரசே தேர்தலுக்குப் பயமா?” உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பினர். இதனால் சபைக்குள் குழப்ப நிலை உருவானது.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சபை நடவடிக்கைகள், நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.